இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் எலிகள் குழந்தைகள் அருகில் ஓடியது பதிவாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஜா யஷ்வந்தராவ் சிக்சாலயா (MYH) என்ற மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வாரம் பிறந்த இரண்டு குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிசிடிவியில் பதிவான காட்சி:

மருத்துவமனை ஊழியர்கள், காயமடைந்த குழந்தைகளைக் கண்டதும் உடனடியாக நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகம், தீவிர சிகிச்சைப் பிரிவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் அருகில் எலிகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடும் காட்சி பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு குழந்தையின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டைகளையும் எலிகள் கடித்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் யாதவ் உறுதிப்படுத்தினார். "குழந்தைகள் தற்போது பாதுகாப்பாகவும், தொடர் கண்காணிப்பிலும் உள்ளனர். மருத்துவமனை முழுவதும் விரைவில் பெரிய அளவில் எலி ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். உறவினர்கள் வார்டுகளுக்குள் உணவு கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று டாக்டர் யாதவ் தெரிவித்தார். மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கடைசியாக எலி ஒழிப்புப் பணிகள் நடந்ததாக அவர் கூறினார்.

டாக்டர் பிரஜேஷ் லஹோதி என்ற மற்றொரு மூத்த மருத்துவர், "மருத்துவமனைக்குள் அதிக எண்ணிக்கையிலான எலிகள் உள்ளன. மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க, இரும்பு வலைகள் அமைக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எலி ஒழிப்புக்கான விரிவான திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் தீராத எலிகள் தொல்லை:

மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் எலிகள் தொல்லை ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும், மாநிலம் முழுவதும் பல பிரேதப் பரிசோதனை மையங்களில் எலிகள் மனித உடல்களைக் கடித்ததாகப் பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் போபால் ஹமீடியா மருத்துவமனையில், ஒரு 50 வயது நபரின் காது எலியால் கடிக்கப்பட்டிருந்தது.

மே மாதத்தில் விடிஷா மாவட்ட மருத்துவமனையில், ஒரு 70 வயது விபத்தில் இறந்தவரின் உடலின் மூக்கு மற்றும் கைகள் எலிகளால் கடிக்கப்பட்டிருந்தன. அதேபோல், ஜனவரி மாதத்தில் சாகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உடல்களின் கண்களை எலிகள் கடித்திருந்தன.

ஆளும் பா.ஜ.க. அரசு மாநிலத்தில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. "மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தைகள்கூடப் பாதுகாப்பாக இல்லை. இந்தச் சம்பவம் அரசின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டதைக் காட்டுகிறது" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அமித் சௌராசியா கூறினார்.