rasya award for reporter gowri langesh
மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்க்கு ரஷியாவின் ‘அன்ன பொலிட்கோவஸ்கியா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
முற்போக்கு கருத்துக்களையும், மதவாதத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் வந்தவர் மூத்த பத்திரியைாளர் கவுரி லங்கேஷ். இவர் மர்ம நபர்களால் கடந்த மாதம் 5-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு ரஷியாவின் ‘அன்ன பொலிட்கோவஸ்கியா’ விருது அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவின் புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர் அன்ன பொலிட்கோவ்ஸ்கயா(வயது47). கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி மர்ம நபர்களால் பொலிட்கோவ்ஸ்கயா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவரின் நினைவாக லண்டனைச் சேர்ந்த “ரா இன் வார்’’ என்ற அமைப்பு பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறது.
இது குறித்து “ரா இன் வார்’’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வலதுசாரி இந்துத்துவத்தையும், ஊழலையும் எதிர்த்து, கவுரி லங்கேஷ் குரல் கொடுத்து வந்தார். அவரின் குரலை ஒடுக்கும் வகையிலும், அவரின் எழுத்து விமர்சனத்தை பொறுக்க முடியாமலும் கடந்த செப்டம்பர் 5-ந்தேதி வீட்டு முன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரின் துணிச்சலை பாராட்டி, அன்ன பொலிட்கோவ்ஸ்கயா விருது தரப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா கூறுகையில், “ இந்த விருது எழுதுவதற்கும், போராடுவதற்கும் விருப்பமுள்ளவர்களுக்கு தார்மீக ரீதியாக ஊக்கப்படுத்துவதாக அமையும்’’ எனத் தெரிவித்தார்.
கவுரி லங்கேஷுடன், இந்த விருதை பத்திரிகையாளர் குலாலி இஸ்மாயில்(வயது31) என்பவரும் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இவர், தலிபான்களை எதிர்த்து பேசியதால், கொலை மிரட்டலுக்கு உள்ளானார்.
