Raped girls - young men arrested ...

உணவு வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து சென்று 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கலபுரகியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் என்கிற மஞ்சுநாத். இவர் பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மாலை அதேபகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மஞ்சுநாத், அந்த சிறுமியிடம், அருகில் ஒரு கிரகபிரவேச நிகழ்ச்சி நடப்பதாகவும், பாத்திரங்களை எடுத்துவந்தால் சாப்பாடு வாங்கி தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த சிறுமி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மஞ்சுநாத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றாள். ஆனால் மஞ்சுநாத் அந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இரவு முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு மறுநாள் அந்த சிறுமியை அவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அவளுடைய வீட்டின் அருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

அதே போல் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியிலும் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுமியை மஞ்சுநாத் உணவு வாங்கி கொடுப்பதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெங்களூரு சஞ்சய்நகர், ராஜராஜேஸ்வரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுநாத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.