சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரையடுத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தா இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவல்துறை ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. 

இதனிடையே, இந்த வீடியோ வெளியிட்ட பின்னர் அந்த மாணவி திடீரென மாயமானார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், திடீரென நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த விவகாரம் தொடர்பாக 43 வீடியோக்களை விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆதாராம் வழங்கினார். இந்நிலையில், இன்று காலை சின்மயானந்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.