மகாராஷ்டிராவில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞரிடம் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறி பெண் ஒருவர் தப்பியுள்ளார். 

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் வலுஜ் பகுதியை சேர்ந்த 29 வயது விதவைப் பெண் தனது 7 வயது மகளுடன் கடந்த 25-ம் தேதி கடைக்கு சென்றார். வீடு திரும்புவதற்கு ரூ.10 மட்டுமே கையில் இருந்த நிலையில், ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார். ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து, லிப்ட்’ கேட்பதற்காக ஷா நூர்மியா மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். இதனால், வாகனத்தில் வரும் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்ற குழந்தையுடன் காத்திருந்துள்ளார். அப்போது 22 வயதான இளைஞர் கிஷோர் விலாஸ் அவாத், தனது பைக்கில் அப்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்தார்.

 

அப்போது அந்த பெண் அவரிடம் லிப்ட் கேட்டு தனது குழந்தையுடன் அந்த இளைஞரின் பைக்கில் ஏறிச் சென்றார். ஆனால் அவர் அப்பெண்ணையும் அவரது மகளையும் ராஜ்நகரை அடுத்த நல்லா பகுதிக்கு கடத்தி சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட விதவைப் பெண் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறியதை அடுத்து, தானும் அந்நோயினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் அப்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அவர் தப்பிச்சென்றுள்ளார். 

இது தொடர்பாக பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அப்பெண் கூறிய அங்க அடையாளங்கள், இளைஞனின் கையில் போடப்பட்டிருந்த டாட்டூ’ ஆகியவற்றைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர் தெரிவித்த அடையாளங்களை வைத்து கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.