அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. 

ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தான அலுவலக கணினிகள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 20 கணினிகள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கணினியில் இருந்த நிர்வாக ரீதியிலான தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பக்தர்களுக்கான சாமி தர்சன சேவையில் எந்தஒரு பாதிப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான அலுவலக பணிக்காக பயன்படுத்தப்படும் விண்டோஸ் 7 மற்றும் எக்ஸ்பி ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இயங்கும் 20 ஒர்க்ஸ்டேஷன்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவைகளின் நெட்வோர்க் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இதற்கு முன், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாரியோடே பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் திறந்து, கம்ப்யூட்டர்களை ஆன் செய்தனர். அப்போது அவர்களுடைய 4 கம்ப்யூட்டர்களும் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது.

இதேபோல பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொன்னி அருகே உள்ள அருவாபுலம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கம்ப்யூட்டர்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.