உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்துவருகிறார்.

மூடிய அறைக்குள் நடைபெறும் இந்த விசாரணை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்யப்படுவதில்லை. இந்த வழக்குத் தொடர்பாக புகாரளித்த பெண் ஏற்கெனவே இரண்டு முறையில் விசாரணையில் பங்கேற்றார். நேற்று மூன்றாவது விசாரணையில் பங்கேற்ற அவர், இனிமேல் விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த விசாரணையில் எனக்கு ஆதரவாக எதுவும் நடைபெறுவதில்லை. மூடிய அறைக்குள் நடைபெறும் இந்த விசாரணை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்யப்படுவதில்லை. ஏப்ரல் 26, ஏப்ரல் 29-ம் தேதி நான் பங்கேற்ற விசாரணையில் நான் அளித்த வாக்குமூலத்தின் நகல் எனக்கு அளிக்கப்படவில்லை.

விசாரணைக்குழு பின்பற்றும் முறைகள் குறித்து எனக்கு எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை. முதல்நாள் விசாரணையின்போதே, நீதிபதி எண்ணுக்கும், என்னுடைய எண்ணுக்கும் இடையேயான வாட்ஸ் அப் கால், வாட்ஸ் அப் சேட் குறித்த ஆவணங்களை, விசாரணைக்குழுவில் அளிக்க விசாரணைக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தேன்.

ஆனால், அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 30-ம் தேதி அதே விஷயத்தை விசாரணைக் குழு கேட்டது. எப்போது நான் உதவியற்றவளாகவும், மனஅழுத்தமாகவும் உணர்ந்தேனோ என்னால் இந்த விசாரணைக் குழுவில் தொடர்ச்சியாக பங்கேற்க முடியாது. என்னுடைய வழக்கறிஞரை இதில் பங்கேற்க அனுமதிப்பதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.