பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவேற்றிய நடிகை ரம்யா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் சிம்புவுடன் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரம்யா. இவர் அண்மையில் எனது பிரதமர் ஒரு திருடன் என்கிற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரென்டிங் ஆனது. ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான ஹாலண்டேவின் பேட்டிக்கு பிறகு மோடியை திருடன் என்று ராகுல் காந்தி கூறினார். 

ராகுலை பின்பற்றி காங்கிரஸ் கட்சியினரும், மோடி எதிர்ப்பாளர்களும் எனது பிரதமர் ஒரு திருடன் என்று கூறி ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரென்ட் செய்தனர். இதே போல் நடிகை ரம்யாவும் பிரதமர் தனது மெழுகுச் சிலைக்கு வண்ணம் அடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து அதில் மோடியின் நெற்றியில் திருடன் என்று எழுதி ட்விட்டரில் பதிவேற்றினார். நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளராகவும் உள்ளார்.

 

இதனை தொடர்ந்து ரம்யா மீது உத்தரபிரதேசத்தின் கோம்டிநகர் காவல் நிலையத்தில் சையது ரிஸ்வான் என்கிற மருத்துவர் புகார் அளித்தார். பிரதமரின் நெற்றியில் திருடன் என்று எழுதுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ரம்யா தேசத் துரோகம் செய்துவிட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ரம்யா மீது கோம்டி நகர் காவல்நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் ரம்யா மீது வழக்கு பதிவாகியுள்ளது.