காங்கிரஸ் காரிய கமிட்டி புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அந்த கமிட்டியின் உறுப்பினர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக 39 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர அழைப்பாளர்களாக 32 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா அதிருப்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளர்களில் ஒருவராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக அவர் நியமிக்கப்படவில்லை.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அம்மாநில உள்துறை அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், நான்கு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக அங்கீகரிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 19 ஆண்டுகளாக காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக ரமேஷ் சென்னிதலா இருந்ததை சுட்டுக்காட்டும் அவர்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சசி தரூர் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ரமேஷ் சென்னிதலா நிரந்தர அழைப்பாளர்களில் ஒருவராகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவையடுத்து, புதுப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுவதற்கு ரமேஷ் சென்னிதலா மறுத்துவிட்டார். இருப்பினும், தனது அதிருப்தியை கட்சி மேலிடத்துக்கு அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

“ரமேஷ் சென்னிதலா மீண்டும் ஒருமுறை அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மறுக்கப்பட்டது.” என அவருக்கு நெருக்கமான வட்டரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், உட்கட்சிப் பிரச்சினைகளை நேர்த்தியாக கையாளும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்றார். “ரமேஷ் சென்னிதலா கட்சியின் கேரள தலைவர் மட்டுமல்ல. இந்தியாவில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர். புதிய பட்டியல் தொடர்பாக அவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அதனைத் தீர்க்க கட்சித் தலைமை தயங்காது.” என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி. சன்னி தியோலின் வீடு ஏலம்: அறிவிப்பை திரும்பப் பெற்ற பேங்க் ஆஃப் பரோடா!

சென்னிதலாவின் சேவையை கட்சி பயன்படுத்திக்கொள்ளும் என்ற அவர், “ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, பிற்படுத்தப்பட்ட, SC/ST மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பட்டியல் புரட்சிகரமானது.” என்றும் தெரிவித்தார்.

அதேசமயம், இந்த பட்டியல் மீது ரமேஷ் சென்னிதாலாவுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறியுள்ளார். காங்கிரஸின் தேசியத் தலைமை எடுக்கும் எந்த முடிவையும் உறுதியாகக் கடைப்பிடிக்கும் தலைவர் சென்னிதாலா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், சசி தரூர், அம்பிகா சோனி, அஜய் மக்கான், ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, திக் விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், ஆனந்த ஷர்மா உள்ளிட்ட 39 பேர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுவாரஸ்யமாக, சோனியா காந்தியின் கீழ் கட்சியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பிய ஜி23 தலைவர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றிருந்த சசி தரூர், ஆனந்த் சர்மா மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மணீஷ் திவாரி மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் நிரந்தர அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.