நாட்டின் 14-வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் இன்று புதிய குடியரசு தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக ராம்நாத் கோவிந்த், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின், ராஜ்காட் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

நாடாளுமன்றத்துக்கு வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 14-வது குடியரசு தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த், பின்னர் குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.