கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 14ம் தேதி வரை 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிய நிலையில், ஊரடங்கு, நாட்டின் அவசியம் கருதி மீண்டும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

ஆனால் ஏற்கனவே அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கை போல அல்லாமல், இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில், ஏப்ரல் 20க்கு மேல் தொழிற்பேட்டை மற்றும் ஊருக்கு வெளியே உள்ள தொழிற்சாலைகள் இயங்கவும், 50% ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கவும், சிறு குறு தொழில்துறைகள் இயங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. விவசாய பணிகள் மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. எனவே சிறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சரிசெய்யவும் நிதித்துறை அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கடந்த ஊரடங்கின்போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்,  ஊரடங்கால் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால் என்றும் ஆனால் அதை எதிர்கொள்ள ஆர்பிஐ தயாராக இருப்பதாவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அவற்றில் சில:

* கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ தயாராகவுள்ளது.

* ஐ.எம்.எஃப் கணிப்பின்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9%. ஜி20 நாடுகளில் இதுதான் அதிகம்.

* சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்ய மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலங்கள் அவசர தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியிடமிருந்து 60% வரை கூடுதல் கடனுதவி பெறலாம்.

* நாட்டில் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* நாட்டில் 91% ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

* ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன.

மேற்கண்ட அறிவிப்புகள் உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதுடன், பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள ஆர்பிஐ தயாராக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார் சக்தி காந்ததாஸ்.

இந்நிலையில், ஆர்பிஐயின் பதற்றமற்ற நிலையான, தெளிவான செயல்பாடுகளை ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ள டுவீட்டில், ஆர்பிஐ  திடமான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இக்கட்டான சூழலில் இப்படித்தான் செயல்பட வேண்டும். ஆர்பிஐ நடவடிக்கைகளில் பெரும்பாய்ச்சல் எதுவும் இல்லையென்றாலும், இந்த ஆண்டில் மந்தமாக இருக்கும் இந்திய பொருளாதாரத்தை அடுத்த ஆண்டில் மீண்டும் சிறப்பான நிலைக்கு எடுத்துச்செல்ல திடமான, உறுதியான நடவடிக்கைகளை ஆர்பிஐ எடுத்துவருகிறது என்று பாராட்டியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.

மேலும், மாநிலங்களுக்கான கடனுதவி அதிகரிக்கப்பட்டிருப்பது, பணப்புழக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பது ஆகிய நடவடிக்கைகளையும் ராஜீவ் சந்திரசேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.