சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 7 லட்சத்தை கடந்துவிட்டது. 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 1200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலே ஒரே வழி என்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. 

அந்தவகையில் இந்தியாவிலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் கொரோனா சமூக தொற்றாக பரவாததால் அதை தடுக்கும் வண்ணம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதற்காகவும் சமூக விலகலை உறுதி செய்வதற்காகவும்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு பல தரப்பினருக்கும் பல வகைகளில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் அவசியத்தை ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஊரடங்கின் ஆறாம் நாளில் இந்தியா இருக்கும் நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், ஊரடங்கின் ஆறாம் நாளில் நாம் இருக்கிறோம். ஊரடங்கின் அவசியம் குறித்தும் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிப்பது குறித்தும் பலரும் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகின்றனர். 

அதற்காக, இந்த வீடியோவில் ஊரடங்கின் அவசியத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றுதான் வழி. அதனால் தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் இதை நாம் ஏற்றுக்கொண்டு பின்பற்றித்தான் ஆக வேண்டும். 

ஊரடங்கின் அவசியத்தை 2 கிராஃப்களின் மூலம் அதை விளக்குகிறேன். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாக்கிய ஹெச்1என்1 வைரஸை விட மோசமான விளைவுகளை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கிறது. ஹெச்1என்1 வைரஸால் அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகம். எனவே கொரோனா மிகவும் அபாயகரமானது. 

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், இந்த 6 நாட்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. எனவே இன்னும் 15 நாட்கள் ஊரடங்கை கடைபிடிப்பதன் மூலம், கொரோனா பாதிப்பு எண்ணிகை அதிகரிக்காமல் நம்மால் கட்டுப்படுத்த முடியும். 

அதனால் ஊரடங்கை முறையாக கடைபிடித்து ஒற்றுமையாக இருந்து கொரோனாவை விரட்டுவோம் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.