காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370-வது சட்டபிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதை எதிர்த்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா அவரது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். 

இதனையடுத்து, ராஜினாமா கடிதத்தையும் மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் அவர் அளித்தார். இதே காரணத்திற்காக சமாஜ்வாதி எம்.பி.யான சஞ்சய் சேத்தும் ராஜினாமா செய்தார். இவர்கள் இருவரின் ராஜினாமாவையும் ஏற்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.