நாடாளுமன்ற மாநிலங்களவை பிற்பகல் 2.30 வரை தள்ளி வைப்பு!
நாடாளுமன்ற மாநிலங்களவையை பிற்பகல் 2.30 மணி வரை தள்ளி வைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

மணிப்பூரில் வன்முறை மற்றும் அவைக்குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் ராஜ்யசபா நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் மாநிலங்களவையை பிற்பகல் 2.30 மணி வரை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில், பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம், 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதனை தட்டிக்கேட்ட அவரது சகோதரர் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்ய மாட்டார்; குகு சமூகத்திடம் பேசிய அமித் ஷா!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், மணிப்பூர் நிலமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிலைக் கோரிய திரிணாமூல் எம்.பி., டெரிக்-ஓ-ப்ரைன் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று நீக்கி விட்டார்.
இந்த நிலையில், அவை நடவடிக்கைகள் இன்று தொடங்கியதும் தனது வார்த்தைகளில் என்ன தவறு உள்ளது எனவும், அவைக்கு பொருந்தாத வார்த்தைகள் என்ன உள்ளது எனவும் கேள்வி எழுப்பிய டெரிக்-ஓ-ப்ரைன், அவரது வார்த்தைகளை நீக்கியது தொடர்பாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முயன்றார். இது தொடர்பாக அவைத் தலைவர் எழுப்பிய கேள்விக்கு, டெரிக்-ஓ-ப்ரைன் விளக்கம் தர முயன்றார். ஆனால், மாநிலங்களவை நடவடிக்கைகளை பிற்பகல் 2.30 மணி வரை தள்ளி வைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.