பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
Rajnath Singh's Explanation In Parliament On Operation Sindoor: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி 100 பயங்கரவாதிகளை கொன்றது. இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்கியது.
ஆபரேஷன் சிந்தூர்
இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சி கேட்டாதால் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தான் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வேன் என மிரட்டியதால் தான் இந்தியா போரை நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும் தன்னால் தான் இந்தியா, பாகிஸ்தான் போர் நின்றது என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஏன்?
இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்த்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ''பஹல்காம் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்குவம் நோக்கிலேயே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தானின் ஆணு ஆயுத மிரட்டல்
நமது ராணுவம் அப்பாவிகளுக்கு எந்தத் தீங்கும் இழைக்காமல் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் மறைவிடங்களுக்கும் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியது. 22 நிமிடங்களுக்குள், ஒன்பது பயங்கரவாத தளங்கள் துல்லியமாகத் தாக்கப்பட்டன. 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆணு ஆயுதத்தை வைத்து மிரட்டியது. ஆகையால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது'' என்றார்.
டிரம்ப் கூறியதால் போர் நிறுத்தமா?
தொடர்ந்து தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது குறித்து பேசிய ராஜ்நாத் சிங், ''ஆபரேஷன் சிந்தூர் எந்த வெளிநாட்டு அழுத்தத்தின் பேரிலும் நிறுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களை அடையவே மேற்கொள்ளப்பட்டது. அதை அடைந்தவுடன் நாங்கள் ஒரு தற்காலிக இடைநிறுத்தத்தை அறிவித்தோம். மேலும் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டதால் போர் நிறுத்தப்பட்டது. டிரம்ப் போன்றவர்களின் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. எனது அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் பொய் சொல்ல முயற்சிப்பதில்லை'' என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் சந்தேகம் வேண்டாம்
மேலும் பாகிஸ்தான் உடனான மோதலில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், அது குறித்து விளக்கம் அளித்த ராஜ்நாத் சிங், ''எதிர்க்கட்சிகள் எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஒருமுறை கூட கேட்கவில்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி பெற்றதா? என்று கேட்கவில்லை. ஆனால் நமது படைகளின் திறன் குறித்து கேள்வி கேட்கின்றன. ஆபரேஷன் சிந்தூரில் நமது முப்படைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகப்பட வேண்டாம்.
பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை
பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்திய இலக்குகளைத் தாக்க முயன்றாலும், நமது எந்த இலக்கையும் தாக்கி எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு பாகிஸ்தானின் தாக்குதலை முழுமையாகத் தடுத்தது'' என்றார். தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
