ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க;- பேரறிவாளனின் வருங்காலம் தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும்.. வாழ்த்து சொன்ன சீமான் !
உச்சநீதிமன்றத்தால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
7 பேரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்து கண்டனம் தெரிவித்தது. பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 தமிழரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க;- நளினியை விடுதலை செய்வதில் எந்த தவறும் இல்லை.. கே.எஸ் அழகிரி கொடுத்த புது விளக்கம் !