டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க ஒரே நாளில் திருமாவளவனுக்கு அப்பாய்ன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை சிறையில் இருந்து விடுவிக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். தமிழக அரசே முடிவு செய்து ஏழு பேரையும் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இதனை அடுத்து ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிடுமாறு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த தீர்மானத்தின் மீது பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவருகிறார் புரோஹித். உயர்நீதிமன்றமும் கூட இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது. இதனால் அடுத்து இருக்கும் ஒரே நம்பிக்கை உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு தான். மேலும் ஆளுநரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மனது வைத்தால் உடனே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது. 

இதனை அறிந்த திருமாவளவன் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாளை அமித் ஷாவுடன் சந்திக்க வைக்க ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். ஆனால் அற்புதம் அம்மாளை சந்திக்க அமித் ஷா தரப்பில் இருந்து எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இதன் பிறகு தான் திருமாவளவனும் அமித் ஷாவை சந்திக்க முடிவு செய்தார். இதற்கான அனுமதி கேட்ட போது என்ன காரணமாக இருந்தாலும் சரி அவரை உடனே வரச் சொல்லுங்கள் என்று அமித் ஷா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. 

இப்படி ஒரு அழைப்பு வரும் என்பதை திருமாவளவனே கூட எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அற்புதம் அம்மாளை டெல்லி வரவழைத்து அமித் ஷாவை சென்று சந்தித்துள்ளார் திருமாவளவன். அப்போது இந்த விவகாரத்தில் உறுதியாக நல்ல முடிவு எடுப்பதாக அமித் ஷா தரப்பில் இருந்து உறுதி மொழி கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த திருமாவளவனுடனான அமித் ஷாவின் சந்திப்பே தமிழக அரசியலின் அடுத்தடுத்த கட்டங்களை தீர்மானிக்கப்போகிறது என்கிறார்கள். 

ஏனென்றால் தற்போது வலுவாக உள்ள திமுக கூட்டணியை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது. இந்த நிலையில் திடீரென திருமாவளவனை அழைத்து பேசி அனுப்பியுள்ளார் அமித் ஷா. இது வெறும் பேரறிவாளன் விவகாரம் மட்டும் அல்ல,அதற்கு மேலானது என்று கூறி கிசுகிசுக்கிறார்கள் உள்ளூர் பாஜகவினர்.