கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், சிறு, குறு தொழில்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்படைந்தனர். 

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஈடுகட்டி, உள்நாட்டு உற்பத்திக்கும் உள்நாட்டு வணிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதுடன், இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக உருவாக்கும் விதமாக, சுயசார்பு இந்தியா என்ற திட்டத்திற்கு ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. 

அந்தவகையில், ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோர், நிதி நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், சுய உதவிக்குழுக்கள், பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறக்கூடிய வகையில், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது. 

முக்கியமான சில அறிவிப்புகள்:

1. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையற்ற வங்கிக்கடன் வழங்கப்படும். அதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.

2. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான துணை நிதியாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

3. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதிக்குள் நிதி என்ற வகையில் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

4. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் வழங்கு நிறுவனங்களில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரூ.30 ஆயிரம் கோடியும்,  கடன்கள் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் முதல் 20 சதவிகித இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்; எனவே அதற்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

5. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு(ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும்) 2 மாதங்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி/கோதுமை, பருப்பு வழங்கப்படும். 

6. மத்திய அரசின் ஜன் தன் திட்ட பெண்களின் வங்கிக்கணக்குகளில் மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. 

7. பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா மற்றும் ஜன் தன் திட்ட  பயனாளிகளுக்காக ரூ.1.7 லட்சம் கோடி  மதிப்பில் நிதியுதவி.

8. விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.

9. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஒருபகுதியாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான வீட்டுகடனுக்கான வட்டி விகிதங்கள் மீது மானியம் வழங்கும் திட்டம் மார்ச் 2021 வரை நீட்டிக்கப்பட்டு, அதற்காக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

10. கல்வி, மருத்துவத்துறைகளின் மேம்பாடு, பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி என மொத்தம் ரூ.20.97 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசின் பொருளாதார தொகுப்பு நிதி போதாது என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஒரு தரப்பு விமர்சனம் செய்தாலும், மத்திய அரசின் அறிவிப்புகள் பொதுவாக வரவேற்பையே பெற்றுள்ளன. 

அந்தவகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து தன்னிறைவு பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்ட அறிவிப்புகளை அலசி ஆராய்ந்துள்ள ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், அதுகுறித்த தனது பார்வையை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

அதில், கொரோனாவால் இந்திய பொருளாதாரம் அடைந்துள்ள சரிவை பற்றியும், அதன் விளைவுகளை பற்றியும் எனது கருத்தை பலரும் கேட்டுவருகின்றனர். அந்தவகையில் இந்த கருத்துகளை பதிவு செய்கிறேன். கொரோனா இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதார மந்தநிலை ஏற்படாமல் தடுத்து, பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்து, விரிவுபடுத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.  இந்தியாவில் கொரோனாவால், சரக்கு மற்றும் சேவை வழங்குதல் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிலுமே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா ஊரடங்கால், சேவை, உற்பத்தி, ஏற்றுமதி, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் என அனைத்துமே கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால் இந்த தொழில்கள் எல்லாம் கூட அரசின் உதவியுடன் விரைவில் மீண்டெழுந்துவிட முடியும். ஆனால் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் மக்களின் பழக்கவழக்கங்களிலும் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், போக்குவரத்து பயணங்கள் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி தொழில்கள் மீண்டெழ நீண்ட காலமாகும். 

கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையை சமாளிக்க, மத்திய அரசின் உடனடி நோக்கம் இதுவாகத்தான் இருக்கும். 1) கொரோனாவை எதிர்கொள்ள மாநில அரசுகளின் தேவைகளின் பூர்த்தி செய்து கொடுப்பது. 2) ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை போக்குவது, தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் காப்பது. 

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, ஜன் தன் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ், ஏழைகள், விவசாயிகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவுவதற்காக ரூ.1.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைப்பதற்காக, 3 மாதங்களுக்கு வங்கிக்கடன் தவணை செலுத்துவது மற்றும் வரி செலுத்துவது ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார மீட்டெடுப்பின் அடுத்தகட்டம்: 1) ஏழை மக்களை பாதுகாப்பது, தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை எந்த சிக்கலும் இல்லாமல் மறுபடியும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். 2) உலகளவிலான வாய்ப்புகள் இருப்பதால், பொருளாதார சீர்திருத்த மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் தேவை. 

இதுவரைக்கும் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால், ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான் அதிகம் பயன்பெறும். 

1. ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் ஆகியோருக்காக பிரதம மந்திரி, பிரதம மந்திரி கிசான், ஜன் தன் யோஜனா ஆகிய திட்டங்களுக்கு ரூ.4.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக ரூ.3.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏப்ரலில் இருந்தே, பணப்புழக்கத்தை ஆர்பிஐ மூலம் உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், ஹவுசிங் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

பிரதமர் மோடி அரசு, கொரோனாவை எதிர்கொள்ள, சுகாதார நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளால் கொரோனாவிலிருந்து மீண்டபின்னர், இந்தியாதான் உலக பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும்.

பிரதமர் மோடி, பொருளாதார மீட்டுருவாக்கத்திற்கும் அப்பாற்பட்டு நாம் சிந்திக்க வேண்டும் என விரும்புகிறார். உலக பொருளாதாரத்தில் கடும் போட்டியாளராக இந்தியா திகழ வேண்டும்; உற்பத்தியை பெருக்கி, உலக நாடுகளுக்கு சரக்கு மற்றும் சேவைகளை வழங்குமளவிற்கு இந்தியா வளர வேண்டும் என நினைக்கிறார். 

இனிமேல் இந்திய பொருளாதாரமும் மக்களும் பாதிக்கப்படக்கூடாது. கிராமம்/நகரம்/மாநகரம்/மாவட்டம்/மாநிலம்/நாடு என்று அந்தந்த அளவில் தன்னிறைவு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.