2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உட்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வேளாண் துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் விதமாக, பெட்ரோல், டீசல் உட்பட சிலவற்றின் மீது செஸ் வரி விதிக்கப்பட்டது. செஸ் வரி விதிப்பு உள்ளிட்ட பட்ஜெட்டின் சில அம்சங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. 

அப்படியான விமர்சனங்களுக்கு பட்ஜெட் மீதான தனது உரையில் பதிலடி கொடுத்தார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர். ராஜ்ய சபாவில் பேசிய எம்பி ராஜீவ் சந்திரசேகர், இந்த பட்ஜெட் லேண்ட்மார்க் பட்ஜெட். வளர்ச்சிக்கான பாதையை வழிவகுத்துள்ள பட்ஜெட். 

இயற்கை பேரிடர்கள் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது இயல்புதான். எந்தவிதமான இயற்கை பேரிடரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மத்திய அரசு உதவும். ஆனால் கொரோனா பெருந்தொற்று தேசிய பேரிடர்; ஒட்டுமொத்த தேசத்துக்குமானது.

கொரோனாவால் ரூ.18 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வாழ்நாளில் ஒருமுறை ஏற்படக்கூடிய இழப்பு. இந்த பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இந்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில் இந்த பட்ஜெட் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்ஜெட்.

கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகமான அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நடப்புக்கணக்கு உபரியும் அதிகம். 11% வளர்ச்சியுடன் இந்தியா தான் அதிவேகமாக வளர்ந்துவரும் நாடு என்று ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது. இவையெல்லாம் நமக்கு நற்செய்தி. ஒருவேளை எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானாலும் நற்செய்தியாக இருக்க முடியாது.

இந்த பட்ஜெட் 7 சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. அரசு அதிக செலவு செய்வது, உட்கட்டமைப்பை மேபடுத்துவது, அரசு செயலாக்கம், உற்பத்தித்துறை விரிவாக்கம், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி உள்ளிட்ட 7 அம்சங்களை உள்ளடக்கியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிதி சிக்கலை சமாளித்து செயல்பட முடியவில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், 2014லிருந்து நிதி நிறுவனங்களை சிறப்பாக கட்டமைக்கப்பட்டதால், நிதி சிக்கலை நிதி நிறுவனங்கள் தன்னிச்சையாக சமாளித்து செயல்படுகின்றன. 

2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தபோது சுகாதாரத்துறைக்கு ரூ.27,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ.2.35 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவால் ரூ.18 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பிற்கு கொரோனாவை பரப்பிவிட்ட சீனா தான் காரணம். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி நண்பர்கள், சீனாவிடமிருந்து அந்த தொகையை மீட்டுக்கொடுத்தால், முதலீடு விலகலுக்கோ, கூடுதல் வரி விதிக்கவோ தேவையிருக்காது என்று ராஜீவ் சந்திரசேகர், நிதி நிலைமையையும், அதை சமாளித்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லவும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளுக்கு உரைக்கும்படியாக எடுத்துச்சொல்ல, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு அடங்கினர்.