'விக்சித் பாரத்' திட்டம் குறித்து அகிலேஷ் யாதவ் தெரிவித்த கிண்டலான கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது வாரிசு அரசியலுக்கும், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவதாக ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் 'விக்சித் பாரத்' (Viksit Bharat) தொலைநோக்குத் திட்டத்திற்கு எதிராகச் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்த கருத்துகளுக்கு, கேரளா பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளார்.

வாரிசு அரசியல் தலைவர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான வேறுபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், அகிலேஷ் யாதவ், இந்திய மக்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வாரிசு அரசியல்

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராஜீவ் சந்திரசேகர், அகிலேஷ் யாதவுடன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ் ஆகியோரையும் விமர்சித்தார்.

"அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் போன்ற வாரிசு அரசியல் மூலம் வந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்குமான வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்று, தங்கள் மகன்கள், தங்கள் பிள்ளைகள், தங்கள் குடும்பங்களுக்காக மட்டுமே சிந்திக்கிறார்கள். இந்திய மக்களின் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை," என்று ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

மேலும், "பிரதமர் மோடி தனக்காகவோ அல்லது தன் குடும்பத்திற்காவோ சிந்திப்பதில்லை. அவர் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைக்கக் கடினமாக உழைக்கிறார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகிலேஷ் யாதவ் எழுப்பிய கேள்வி

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில், "விக்சித் பாரத்" குறித்த பாஜகவின் பார்வை பற்றி கேள்வி எழுப்பினார்.

"பாஜக 2047 பற்றிப் பேசுகிறது. அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையைக்கூடப் படிப்பதில்லை... ஏன் 2047? இன்னும் 100 ஆண்டுகளைச் சேர்த்துக்கொள்ளலாமே? நீங்கள் 2047 வரை உயிர் பிழைத்திருப்பீர்களா?" என்று கிண்டல் செய்யும் தொனியில் அகிலேஷ் யாதவ் பேசியிருந்தார்.

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 2047-க்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதே 'விக்சித் பாரத்' திட்டத்தின் நோக்கம் என்று பாஜக கூறிவருகிறது.

என்.டி.ஏ. கூட்டணி கண்டனம்

அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துகளுக்கு என்.டி.ஏ (NDA) கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேச அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி பேசுகையில், "சமாஜ்வாதி கட்சி நீண்டகாலமாகவே எதிர்மறையான அரசியல் செய்து வருகிறது. 2047-க்குள் நாட்டை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை," என்றார்.

மற்றொரு உத்தரப் பிரதேச அமைச்சர் தயா சங்கர் சிங், "அவர்கள் (அகிலேஷ் யாதவ்) தங்களுக்காகவும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால், மோடி தன்னலமில்லாதவர். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது தொலைநோக்குப் பார்வை," என்று தெரிவித்தார்.