சீன ராணுவம் கடந்த 15ம் தேதி இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், சீன தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும், சீனா சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. 

சீனாவின் இந்த அத்துமீறல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலையும், எல்லையில் பதற்றத்தையும் அதிகரித்தது. இந்த தாக்குதலையடுத்து, இருதரப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின்போது, சீனா அத்துமீறியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 

இந்தியா - சீனா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, அதன்பின்னர் பம்மியது. இந்தியாவுடனான மோதலை விரும்பவில்லை என சீனா தெரிவித்தது. சீனா பம்மிய அதேவேளையில், இந்தியாவின் குரல் வலுத்து ஒலித்தது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு தான். ஆனாலும், இந்தியா அதன் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்காக, எதையும் செய்யும் என்று கெத்தான தொனியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 

சீனாவின் அத்துமீறலையடுத்து, சீனாவுடனான ராணுவ ரீதியான மற்றும் வர்த்தக ரீதியான அணுகுமுறையை முழுவதுமாக மாற்றியுள்ளது இந்திய அரசாங்கம். இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இந்திய ராணுவ வீரர்களுக்கு, சீனா விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவம் தாக்குதல் நடத்தினால், இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதற்கு முழு சுதந்திரமும், களச்சூழலின் அடிப்படையில், சுயமாக முடிவெடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்பதையெல்லாம் கடந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிரான விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த சூழலிலும் காங்கிரஸ் அரசியல் செய்யும் முனைப்பிலேயே இருக்கிறது என்பதை அக்கட்சியினரின் பேச்சுகளே பறைசாற்றுகின்றன. 

அந்தவகையில், இந்தியா - சீனா இடையேயான கல்வான் மோதலையடுத்து, இந்திய எல்லைக்குட்பட்ட லடாக் பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டதா என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியிருந்தார். அவருக்கு லடாக் பாஜக எம்பி ஜம்யங் ஸெரிங் நம்கியால், 1962லிருந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, சீனாவிடம் இழந்த இந்திய பகுதிகளை பட்டியலிட்டு, பாஜக ஆட்சியில் எந்த பகுதிகளையும் இழக்கவில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில், சீனாவுடனான உறவில் பிரதமர் மோடியின் அணுகுமுறை பலனளிக்கவில்லை என்றும், சீனா தொடர்ந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துவருவதாகவும் ஜப்பான் டைம்ஸ் ஊடகத்தின் கட்டுரையை தனது டுவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி,  நரேந்திர மோடி அல்ல; இவர் சரண்டர் மோடி என்று டுவிட்டரில் நக்கலடித்திருந்தார். 

இந்திய பகுதிகள் எதையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியும் கூட, மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி இதைவைத்து அரசியல் செய்துவருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை நக்கலடிக்கும் விதமாக சரண்டர் மோடி என்று பதிவிட்ட ராகுல் காந்திக்கு, ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார். 

ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ள டுவீட்டில், இந்தியா - சீனா விவகாரத்தில் பரவலாக உள்ள கருத்தை மறுக்கும் விதமாக உள்ளது ராகுலின் டுவீட். இந்த இளம் வாரிசு அரசியல்வாதி, அவரது 50 ஆண்டுகால வாழ்வில் எதையுமே சாதித்ததில்லை. ஆன்லைனில் ட்ரோல் செய்யப்படுவது மட்டுமே அவரது வாழ்வின் லட்சியம் என்று நக்கலாகவே பதிலடி கொடுத்துள்ளார்.