பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு இன்றுடன்(நவம்பர் 8) 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை பணமுதலாளிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், அது தவறாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டபோதே விமர்சித்த எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி அரசை வேறு காரணம் கொண்டு விமர்சிக்க முடியாமல் இன்னும் அதையே சொல்லி விமர்சிக்கிறது என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜீவ் சந்திரசேகர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்ட நான்காம் ஆண்டு தினமான இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி இன்னும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த குழப்பத்தை பரப்பிவருகிறது. 2014 முதல் பிரதமர் மோடி அரசாங்கத்தின் வளர்ச்சியை எந்தவகையிலும் விமர்சிக்கமுடியாத எதிர்க்கட்சி, அவ்வப்போது பிரதமர் மோடி அரசை விமர்சிக்க காரணங்களை தேடிவருகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 3 இலக்குகளுடன் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதே முதல் குறிக்கோள். நாட்டில் பயங்கரவாதத்தை பரப்ப ஹவாலா வழியாக வரும் நிதியை நிறுத்துவது 2வது நோக்கம். 3வது மற்றும் மிக முக்கியமான குறிக்கோள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வருமானத்தையும் அதிகரிப்பதும், ஒவ்வொரு திட்டத்திலிருந்தும் பயனடைவதும் ஆகும் என்று ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்.