மாணவர்கள் தற்கொலையை தடுக்க சீலிங் ஃபேனில் நூதன சாதனம்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
மாணவர்கள் தற்கொலையை தடுக்க சீலிங் ஃபேனில் சாதனம் ஒன்றை பொருத்த கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில், சீலிங் ஃபேனில் தற்கொலை தடுப்பு சாதனத்தை பொருத்த ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் மையமாக உள்ளது. நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் இங்கு வந்து தங்கி போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கோட்டா மாவட்டத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15ஆக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு, கடந்த 12ஆம் தேதி கோட்டா மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் தற்கொலை எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில், சீலிங் ஃபேனில் தற்கொலை தடுப்பு சாதனத்தை பொருத்த கோட்டா மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை துணை ஆணையர் ஓ.பி பங்கர் பிறப்பித்துள்ளார்.
மின்விசிறிகள் இந்த சாதனங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் விடுதி உரிமையாளர்கள் மற்றும் அவற்றின் நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படம்!
அதன்படி, சீலிங் ஃபேன்களில் ஸ்பிரிங் ஒன்று பொருத்தப்படும். 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள பொருளை மின்விசிறியில் தொங்கவிட்டால், அதனுடன் இணைந்திருக்கும் ஸ்பிரிங் மூலம் சைரன் சத்தம் ஒலிக்கும். இதன் மூலம் தற்கொலை செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். ஆனால், மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த தற்கொலை தடுப்பு சாதனம் எந்த வகையில் உதவும் என்பது உறுதியாக தெரியவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
(உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தாலோ அல்லது அந்த எண்ணத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றி கவலைப்பட்டாலோ அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்பட்டாலோ, சினேகா அறக்கட்டளையை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கவலைகளுக்கு செவி சாய்க்க பலரும் இருக்கின்றனர். உங்களது உயிர் அளப்பரிய சொத்து. அதனை தயவு செய்து மாய்த்துக் கொள்ளாதீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கண்டிப்பாக கூடாது. எந்த வித பிரச்சினைக்கும் அது தீர்வல்ல.)