ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அரசு அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் அன்றி வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளிவரக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலியை எதிர்பார்த்து வாழ்வை நடத்தி வந்த ஏழை எளிய மக்களின் நிலை தான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக ஆகியிருக்கிறது. அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்த தொடங்கி இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை அரசு வழங்கி வருகிறது. அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

இவ்வாறு பலர் உதவி செய்துவரும் நிலையில் சிலர் தங்கள் உதவியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விளம்பரம் தேடுவது வாடிக்கையாக இருக்கிறது. உதவி செய்வதை புகைப்படம் எடுப்பதால் நம்மை பார்த்து பலரும் பிறருக்கு உதவ முன்வருவார்கள் என்று அவர்கள் தரப்பில் கூறுவது சரியாக தென்பட்டாலும் பிறரின் கையை எதிர்பார்த்து நிற்கும் மக்களின் புகைப்படங்களை அனுமதி இன்றி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது அம்மக்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும். இதனாலேயே பலர் நிவாரண உதவிகளை பெறும் போது தயக்கதுடன் இருப்பதை உணர முடிகிறது.

இந்த நிலையில் தான் இதுபோன்ற விளம்பர பிரியர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஏழைகள் மற்றும் வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் போது புகைப்படம் எடுப்பதை ராஜஸ்தான் அரசு தடை செய்வதாகவும் தங்களின் சொந்த விளம்பரத்திற்காக அவ்வாறு புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் மாநில முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் ஏழைகள் தான் அரசின் உதவியை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர் ரேஷன் பொருட்கள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்கும் முதல் உரிமை அவர்களுக்கே உரியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.