ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இருக்கிறது ஜே.கே.லான் அரசு மருத்துவமனை. இங்கு கடந்த சில வாரங்களாக குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் பலியாகி உள்ளனர். ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

கடந்த மாதத்தில் மட்டும் 4,689 குழந்தைகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர். பச்சிளம் குழந்தைகளுக்கு நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால் உயிரிழப்பு நிகழ்வதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. எனினும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனை அமைந்திருக்கும் தொகுதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தொகுதியாகும். அவர் பலியான குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் கூறும்போது, குழந்தைகள் உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக வேண்டாம் என கூறியுள்ளார். குழந்தைகள் உயிரிழப்பு தற்போது குறைந்து வருவதாகவும் அதனை முற்றிலும் குறைக்க அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். தாய் மற்றும் குழந்தைகளின் நலன்தான்  முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.