Asianet News TamilAsianet News Tamil

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் 2023: ஒதுக்கப்பட்டு, பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்த வசுந்தர ராஜே; பின்னணி என்ன?

ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு முக்கியமானது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் மனதை அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இத்துடன், மாநிலத்திலும் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதையும் இந்த தேர்தல் தீர்மானிப்பதாக இருக்கிறது.

Rajasthan Assembly Elections 2023: Sudden importance to Vasundhara Raje Scindia
Author
First Published Nov 8, 2023, 2:19 PM IST | Last Updated Nov 8, 2023, 2:19 PM IST

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலுக்கு பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. பாஜக - காங்கிரஸ் நேருக்கு நேர் களத்தில் மோதுகின்றன. தற்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அசோக் கெலாட் முதல்வரா? சச்சின் பைலட் முதல்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேநிலைதான் பாஜகவிலும் உள்ளது.

முன்பு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய புள்ளியான முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா ஓரம் கட்டப்பட்டார். தற்போது திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளார். இது மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் வரை ஓரம் கட்டப்பட்ட வசுந்தர ராஜே சிந்தியா தற்போது முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். 

பாஜக எம்.பி. தம்பி வருண் காந்தியை சந்தித்த ராகுல்: பின்னணி என்ன?

கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்விக்குப் பின்னர் வசுந்தர ராஜே சிந்தியா பாஜக தலைவர்களால் வெளிப்படையாகவே ஓரம் கட்டப்பட்டார். முதல் கட்ட வேட்பாளர்களை அக்டோபர் 9ஆம் தேதி பாஜக வெளியிட்டு இருந்தது. இதில் வசுந்தர ராஜேவுக்கு ஆதரவானவர்கள் யாருமே இல்லை. இதனால், பாஜக தலைமை இவரை விரும்பவில்லை என்ற பேச்சு அடிபட்டது. இவருக்கு நெருக்கமாக கருதப்படும் ராஜ்பால் சிங், நர்பத் சிங் ராஜ்வி ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டது. 

ஆனால், இரண்டாவது லிஸ்டில் இருந்தவர்களில் ஏறக்குறைய 30 பேர் வசுந்தரா ராஜே அணியைச் சேர்ந்தவர்கள். இத்துடன் முதல் பட்டியலில் வசுந்தரா ராஜே பெயர் இடம் பெறவில்லை. இரண்டாவது பட்டியலில் ஜல்ராபட்டன் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தமாக 200 வேட்பாளர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வசுந்தராவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. 

இதனால், இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவுக்கும், பாஜக மேலிடத்துக்கும் எப்போதும் நெருடல் இருந்து வந்துள்ளது. தற்போதும் மாறவில்லை என்றே கூறப்படுகிறது. முதல் பட்டியலில் வசுந்தராவின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்பது பூதாகரமாக வெடித்தது. ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. வசுந்தராவின் ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டால், வெற்றி பெறுவது கடினம் என்பதை பாஜக மேலிடம் புரிந்து கொண்டது. இதை புரிய வைத்தது மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி. வசுந்தரா ஆதரவாளர்களை ஒதுக்கினால், கர்நாடகா போன்ற நிலை ஏற்படலாம் என்று மேலிடத்துக்கு ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஜோஷி எடுத்துக் கூறியுள்ளார். 

மக்கள் தொகை கட்டுப்பாடு: சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புகோரிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் டாப் தலைவர்களில் யாருமே வசுந்தராவுக்கு ஈடாக மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மாநில முன்னாள் பாஜக தலைவர் சதீஷ் பூர்ணியா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரை சொல்லிக் கொள்ளும் தலைவர்களாக, அடிமட்ட தொண்டர்கள் வரை அறிந்தவர்களாக யாரும் இல்லை. வசுந்தரா ராஜே மட்டுமே கீழ்மட்டத் தொண்டர்கள் வரை அறிந்தவர். இவருக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவும் இருக்கிறது. 

தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் மற்ற மாநிலங்களான சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக வேட்பாளர் தேர்வில் சிக்கலை சந்தித்து வருகிறது. நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு கைகொடுக்கும் மாநிலமாக ராஜஸ்தான் இருப்பதால், மேலிடமும் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. கர்நாடகா, இமாசலப்பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்தது போல் தற்போதைய தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக இல்லை. 

தேர்தல் நெருங்கும் நிலையில், வசுந்தராவுக்குத் தான் மேலிடத்தின் ஆசி இருக்கிறது என்பதை மாநில பாஜகவும் புரிந்து கொண்டது. மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் வசுந்தரா தான் முதல்வர் என்ற பேச்சும் அடிபடுகிறது. தற்போது இருக்கும் போட்டியே, அசோக் கெலாட், வசுந்தரா ராஜே இடையே தான் என்று மாறிவிட்டது. எப்படி வசுந்தரா ராஜேவை வெற்றி கொள்வது என்று அசோக் கெலாட் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். 2020-ல் தனக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே சிக்கல் எழுந்தபோது மறைமுகமாக தனக்கு வசுந்தரா ராஜே உதவியதாக அசோக் கெலாட் பிரச்சாரம் செய்து வருகிறார். இது எந்தளவிற்கு கெலாட்டுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios