ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியும் ஆதரவளித்தன. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஒட்டுமொத்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்களும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதால், அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கர்நாடகா, கோவை உள்ளிட்ட மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை மத்தியிலும் ஆளும் பாஜக கட்சி தட்டிதூக்கி வந்தது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவி மாயாவதி டுவிட்டரில் கூறுகையில், நம்பிக்கை துரோகம், நம்பகத்தன்மையற்றவர்கள் என்பதை காங்கிரஸ் கட்சி நிரூபித்துவிட்டது. மேலும், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.