இதன்படி ராணுவ வீரர் ஒருவர் போர் நடக்கும்போது அல்லது தீவிரவாதிகளுடன் சண்டையிடும்போது வீர மரணம் அடைந்தாலோ அல்லது 60 சதவீதத்துக்கு மேல் காயம் அடைந்தாலோ அவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அந்தத் தொகை ரூ.8 லட்சம் வரை அதாவது 4 மடங்கு உயர்த்தி வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை போரில் உயிரிழக்கும் வீரர்கள் நல நிதியில் (ஏபிசிடபிள்யுஎப்) இருந்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொள்கைரீதியாக ஒப்புதல் அளித்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.

 போரில் உயிரிழக்கும் வீரர்கள் நல நிதியில் இருந்து ஏராளமான வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் சியாச்சின் பனிமலையில் பனிச்சரிவில் சிக்கி இறந்த 16 வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்த நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டது.

போரில் உயிரிழக்கும் வீரர்கள் நல நிதி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டபோதிலும், 2016, ஏப்ரல் மாதத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டது.