டெல்லியை விட ராஜ்பவன் அருகில் உள்ளது; தெலுங்கானா தலைமைச் செயலாளருக்கு தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் பதில்!!
தெலுங்கானா தலைமைச் செயலாளராக சாந்தி குமாரி பொறுப்பேற்ற பின்னர் ஒரு மரியாதை நிமிர்த்தமாகக் கூட தன்னை சந்திப்பதற்கு வரவில்லை என்று மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை மாநிலத்துக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். தொடர்ந்து இவருக்கும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.
''ஆளுநர் பத்து மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. முக்கியமான அனைத்து மசோதாக்களும் நிலுவையில் இருக்கிறது'' என்று உச்சநீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு வழக்கு தொடுத்தது. இதற்கு பதில் அளித்து இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத்தின் தலைமை செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் சாந்தி குமாரி தன்னை இதுவரை ஒருமுறை கூட மரியாதை நிமிர்த்தமாக சந்திக்க வரவில்லை என்றும் டெல்லியை விட ராஜ்பவன் அருகில் தான் இருக்கிறது என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தமிழிசையின் டுவீட்டில், ''டியர் தெலுங்கானா சிஎஸ், டெல்லியை விட ராஜ்பவன் அருகில் தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக தலைமை செயலாளராக பதவியேற்ற பின்னர் ஒருமுறை கூட நீங்கள் வந்து என்னை சந்திக்கவில்லை. எந்த சம்பிரதாயங்களும், நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. நீங்கள் விரும்பாத நட்பு அடிப்படையிலான அரசு சார்ந்த சந்திப்புகள் மற்றும் தொடர்புகள் மிகவும் உதவியாக இருந்திருக்கும். மீண்டும் நினைவுபடுத்துகிறேன், டெல்லியை விட ராஜ்பவன் அருகில்தான் இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
ராஜ்பவனில் இன்னும் 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒரு ரிட் மனுவில் தெரிவித்து இருந்தது. கடந்த மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக மூன்று மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அதேசமயம் செப்டம்பர் 2022 முதல் அனுப்பிய ஏழு மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக மாநில அரசு தெரிவித்து இருந்தது.
அந்த மனுவில், பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா, தனியார் பல்கலைக் கழக மசோதா, வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா போன்ற மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. முலுகுவில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை வனப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கான மசோதா, அசாமாபாத் தொழில்துறை பகுதி மசோதா மற்றும் வேறு சில மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் இருப்பதாக சந்திரசேகர ராவ் அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.