Rain harvest plan in UP
மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து வரைபடத்தில் குறிப்பிட்டால் மட்டுமே வீடு, கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் எம்.பி.யும் மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இவர் முதல்வரான பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆளும் பா.ஜனதா அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், மாநிலத்தின் நீர் நிலைகள் வற்றிவருகின்றன, நிலத்தடி நீர் குறைந்து வருகிறது, அதற்கு அரசின் நடவடிக்கை என்ன எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்வர் ஆதித்யநாத் பேசினார். பேசுகையில், “ மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க புதிதாக குளங்கள் வெட்டப்படும். மரங்களை பாதுகாப்பதிலும், நீர்வளப் பாதுகாப்பிலும் அரசு அதிக கவனம் எடுத்து நடவடிக்கைகள் எடுக்கும்.
வீடு, கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெறும் போது, வரைபடங்களில் கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த குறிப்பிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே கட்டிடங்கள், வீடு கட்ட அனுமதி வழங்கப்படும். மக்களுக்கு குடிநீர் பற்றக்குறை ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நகர மேம்பாட்டு துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது, எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க மழைநீர் சேகரிப்புதிட்டமே சிறந்த தேர்வு என கூறியுள்ளார். மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
