உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று உச்சகட்டமாக இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதுவரையில் 339 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை தொடரும் என பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார்.

மேலும் ஏப்ரல் 20ம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதன் பிறகு பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் ஊரடங்கு சிறிய அளவில் தளர்த்தி கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 10 மாநிலங்களில் இம்மாத இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிரதமர் மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். ஊரடங்கு காலத்தில் தற்போது நடைமுறையில் இருப்பது போல பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும். 

அந்த வகையில் ரயில் சேவையும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை நீட்டித்ததையடுத்து பாசஞ்சர், விரைவு ரயில், அதிவிரைவு ரயில் போன்ற பயணியர் ரயில் சேவைகள் அனைத்தும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் சரக்கு ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.