ஹூப்ளியில் மேல்நிலை ரயில்வே பாலத்தை தாங்கி நிற்கும் இரும்பு தூண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கர்நாடகாவில் ஒரு பரபரப்பான சாலையின் நடுவே இரும்பு தூண் கட்டம் சரிந்து விழுந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும், மாநிலத்தின் உட்கட்டமைப்பின் தரம் குறித்தும் கேள்விஎழுப்புகிறது.
கர்நாடக மாநிலத்தின் வர்த்தக மையமான ஹூப்ளியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மேல்நிலை ரயில்வே பாலத்தை தாங்கி நிற்கும் இரும்பு தூண் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அதனை கடந்த சென்ற ஒரு தண்ணீர் டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஹூப்ளியில், ரயில்வே பாலம் எண் 253 ஐப் பாதுகாப்பதற்காக 4.2 மீட்டர் உயரம் கொண்டு செங்குத்தாக தாங்கும் வகையில் இந்த இரும்பு தூண் அமைக்கப்பட்டிருந்தது. முந்தைய இரவுகளில் சில வாகனங்கள் அந்த இரும்பு தூண் மீது மோதியிருக்கலாம், அதனால் அத்ன கட்டமைப்பு மேலும் பலவீனமடைந்ததாக தென்மேற்கு ரயில்வே அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், சாலை வாகனங்களின் அதிர்வுகள் காரணமாக, இரும்பு தூண் கட்டமைப்பு ஒரு பக்கம் சாய்ந்து பின்னர் கீழே விழுந்ததாக தெரிவித்துள்ளது.
விரைவில் புதிய மற்றும் பலமான பாதுகாப்பு இரும்பு தூண் அமைப்பு பொருத்தப்படும் என்றும் ரயில்வே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
