ரயில் டிக்கெட் கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை உயர்த்தி வருவாயை பெருக்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் கட்டண உயர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தலைமையில் ரெயில்வே ்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் டிக்கெட் கட்டணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தை தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் ரெயில் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆங்கில  நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

ஜி.எஸ்.டி. விளைவுகள்

நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் ஆகிறது. இதன் விளைவாக ரயிலில் ஏ.சி.பிரிவு கட்டணம்  0.5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு 5 சதவீதமாகிறது.

கடைசி உயர்வு

ரெயில் கட்டணத்தை உயர்த்துவது என்பது அரசியல் ரீதியாக பலவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே பயணிகள் கட்டணம் உயர்த்துவது தவிர்க்கப்பட்டு வந்தது.  கடைசியாக கடந்த 2013 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு பின் ரெயில்  பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை.

மேலும், அடுத்த ஆண்டில் இருந்து நிதியாண்டையும் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், நவம்பர் மாதத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்திலேயே ரெயில் டிக்கட் கட்டண உயர்வு அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.


இழப்பை சரிக்கட்ட…

ரயில் சேவைகளின் இயக்கத்திற்கு எரிபொருள், ஊழியர் சம்பளம் என பல்வேறு பிரிவுகளில் ரயில்வே நிர்வாகத்திற்கு கணிசமான செலவு ஏற்படுகிறது. இந்த செலவை சரிக்கட்ட ரயில்களில் ஏசி 3 அடுக்கு பெட்டிகளை அதிகரிக்கச் செய்வது என்றும், இழப்புகளை சரிக்கட்டி வருவாயை பெருக்கும் வகையில் கட்டண உயர்வு ஒன்றே சரியான வழி என்றும் ரயில்வே ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உயர்வு எப்படி இருக்கும்?

இது குறித்து மத்திய ரெயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரெயில் கட்டணம் உயர்வு இருக்கும். அதிலும் ஏ.சி. ஏ.சி. அல்லாத வகுப்புகளில் கட்டண உயர்வு மறைமுக இருக்கும். ஆனால்,எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதே சமயம் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாமல், சிறிய அளவிலான டிக்கெட்கட்டண உயர்வு இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.  

ஆதார் கட்டாயம்

ரயில்களில் பயணம் செய்ய முதியோர், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 50 பிரிவினருக்கு ரயில்வேசலுகை கட்டணம் அளிக்கிறது. ஆனால் இதை பலரும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று புகார்கள் எழுந்தன. எனவே இதை தடுப்பதற்காக சலுகை கட்டணம் வேண்டுவோர் இனி ஆதார் அட்டை சமர்ப்பிக்கவேண்டும் என்ற உத்தரவை ரயில்வேபிறப்பித்துள்ளது. இதன்படி வருகிற 1-ம் தேதி முதல் ஆதார் அட்டையை காட்டினால்தான் ரயில்களில் கட்டணச் சலுகை கிடைக்கும்.