ட்ரெயின்  டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் ரத்து செய்யப்பட்ட சேவை கட்டணம் மீண்டும் நாளை முதல் அமலுக்கு வருவதால் ரயில் கட்டணம் உயரவுள்ளது. குறைந்த பட்சமாக 15 ரூபாய் முதல்  40 ரூபாய் வரை ரயில் கட்டணம் உயரும் என தெரிகிறது.


டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கான சேவை கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது நாளை முதல் சேவை கட்டண நடைமுறை அமலுக்கு வரும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டியில் பயணிப்போர் டிக்கெட் ஒன்று முன்பதிவுக்குச் சேவை கட்டணமாக 15 ரூபாயும், ஏ.சி முதல் வகுப்பு, 2ஆம் வகுப்பு, 3 அடுக்கு ஏசி ஆகிய அனைத்து பிரிவில் டிக்கெட் முன்பதிவுக்குச் சேவை கட்டணமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேவைக் கட்டணத்தைத் திரும்பப் பெறும்போது ஏசி அல்லாத டிக்கெட் ஒன்றுக்கு 20 ரூபாயும், ஏசி டிக்கெட் ஒன்றுக்கு 40 ரூபாயும் சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த கட்டணம் ரத்து செய்தது தற்காலிகமானது என்றும் வேண்டுமானால் மீண்டும் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மீண்டும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.


அதுபோன்று ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக் கட்டணம் நீக்கப்பட்டதற்குப் பிறகு ரயில்வேக்கு 26 சதவிகிதம் வருமானம் குறைந்துள்ளதாக ரயில்வே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.