பிரதமர் மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்த நகர்புற நக்சல்களுக்கு(அர்பன் நக்சல்கள்) ராகுல் காந்தி ஆதரவு தருகிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நேற்று பாஜக தலைவர் அமித் ஷா சென்றிருந்தார். கட்சித் தொண்டர்களுடன் பல்வேறு விஷயங்கள்குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, அவர்களிடம் அமித் ஷா பேசியதாவது:

 இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகல் கனவு காண்கிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்கு வைத்து பாஜகவினர் செயல்பட வேண்டும். அதற்கு குறைவான இடங்களை நாம் பெற்றால் அது பெருமையான வெற்றியாக இருக்காது

மோடி பிரதமராக பதவி ஏற்றபின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எல்லாம் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் பாஜகவினர் என்ன செய்துவி்ட்டார்கள் என்று ராகுல் காந்தி கேட்கிறார்.இளைஞர்கள், விவசாயிகள், வறுமையில் வாடும் ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ெசய்ய முடியாததை பாஜக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தியபோது, மன்மோகன்சிங் அரசு மவுனியாக இருந்து வேடிக்கைபார்த்தது. ஆனால், பாஜக அரசில் பாகிஸ்தான் மீது எதிர்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியைக் கொல்வதற்காக நகர்புற நக்சல்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு அளித்து பேசுகிறார் என்று அமித்ஷா பேசினார்.