காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாகப் போட்டியிடும் அமேதி தொகுதியில் களமிறங்கி உள்ளார். மேலும் ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்து  ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இந்நிலையில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்புக்கு பிறகு மேற்கொண்டு எந்தத் தகவலும் காங்கிரஸ் தலைமையிலிருந்து வெளியாகவில்லை.


இந்நிலையில் இரண்டு தொகுதிகளில் தான் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தத் தகவலை வெளியிட்டார். “கடந்த காலத்தில் பல மூத்த தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்கள். நரேந்திர மோடிகூட இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். நான், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.