சஹாரா நிறுவனம்  விசாரணை மற்றும் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “ வருமான வரித்துறை யாரை பாதுகாக்கிறது மோடியையா? அல்லது சஹாரா நிறுவனத்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.40 கோடி லஞ்சம்

குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்த போது, கடந்த 2013-14ம் ஆண்டுகளில் சஹாரா நிறுவனத்திடம் இருந்த ரூ. 40 கோடி லஞ்சமாகப் பெற்றார் என்று சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 2014ம் ஆண்டு வருமான வரித்துறை சஹாரா நிறுவனத்தில் சோதனையிட்ட போது, மோடிக்கு லஞ்சமாக கொடுத்த பணத்தின் விவரங்கள், ஆவணங்கள் இருந்தன, இது தொடர்பாக பிரதமர் மோடி மீது சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

போராட்டம்

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று முதல் நாடுமுழுவதும் பணமதிப்பு இழத்தல் மற்றும் பிரதமர் மோடியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஒரு மாதப் போராட்டத்தை இன்று தொடங்குகின்றன.

திடீர் பல்டி

இதற்கிடையே 2014ம் ஆண்டு சஹாரா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையிட்டது தொடர்பான வழக்கில் அபராதம், மற்றும் விசாரணையில் இருந்து விலக்கு அளித்து வருமானவரித் துறை தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த சோதனையின் போது கைப்பற்ற ஆவணங்களில் உண்மை ஏதும் இல்லை தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

யாரைப் பாதுகாக்க?

இந்நிலையில், வருமான வரித்துறை தீர்வு ஆணையம் உத்தரவு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில்வெளியிட்ட பதிவில், “ வருமான வரித்துறை சஹாரா நிறுவனத்தை பாதுகாக்க இப்போது அபராதம், விசாரணையை கைவிட்டதா? அல்லது ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் மோடியை காப்பற்ற அந்த நிறுவனத்தின் மீதான விசாரணையை கைவிட்டதா?. பிரதமர் மோடிதன்மீது குற்றம் ஏதும் இல்லை என அவரின் மனசாட்சிக்கு தெரிந்தால், விசாரணையை எதிர்கொள்ள ஏன் அச்சப்படுகிறார்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.