நாடாளுமன்ற மக்களவை ஒத்தி வைக்கப்பட்டபோது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அத்வானியிடம் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பீகார் அரசியல் நிலைமை குறித்து அவர்கள் விவாதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை ஒத்தி வைக்கப்பட்டு 11.30 மணிக்கு மீண்டும் கூடியது.

அதற்கு சற்று முன்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அத்வானி அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து ராகுல் பேசவில்லை. அத்வானி அருகே சாய்ந்து நின்றபடியே ஏறத்தாழ 5 நிமிடத்திற்கும் அதிகமாக ராகுல் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அத்வானியுடன் ராகுல் சம்பிரதாய முறையில் பேசியதாக தெரியவில்லை. பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றத்தின் பின்னணியில் அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பின்னர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடமும் ராகுல் பேசினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவரும் தனது தாயாருமான சோனியாவிடமும் ராகுல் சிறிது நேரம் பேசினார்.