இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் 'சாந்தி மசோதா 2025' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் அணுசக்தித் துறையில் ஒரு முக்கிய கொள்கை மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு மசோதா 2025 புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இது சாந்தி மசோதா (SHANTI bill) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டது.

அணுசக்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள்

இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த அணுசக்தித் துறையில், இனி தனியார் நிறுவனங்களும் அணுமின் நிலையங்களை நிறுவவும், இயக்கவும் அனுமதிக்கப்படும்.

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் அணுசக்தித் திறனை 100 ஜிகாவாட்டாக (100 GW) உயர்த்துவதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு (AERB) சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், அணுசக்தி தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க பிரத்யேக அணுசக்தி தீர்ப்பாயம் (Nuclear Tribunal) அமைக்கப்படும்.

அணுசக்தி பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்கும் முறையை மேம்படுத்தவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை

தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டாலும், அணுசக்தித் துறையின் மிக முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான சில செயல்பாடுகள் தொடர்ந்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

யுரேனியம் செறிவூட்டல் (Uranium Enrichment), பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கையாளுதல் (Spent Fuel Handling), கனநீர் உற்பத்தி (Heavy Water Manufacturing), கதிரியக்கப் பொருட்கள் மீதான கண்காணிப்பு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, அணுசக்தி போன்ற முக்கியமான துறையைத் தனியார் வசம் ஒப்படைப்பது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என்று கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

எனினும், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "இந்த மசோதா இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தூய்மையான எரிசக்தியை நோக்கிய பயணத்திற்கும் மிக அவசியமானது" என்று குறிப்பிட்டார்.