ராகுல் காந்தி கார் மீது கல் வீசப்பட்ட பிரச்சினையில் நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலத்தில் வெள்ளச் சேத பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது ராகுல் கார் மீது பெரிய கல் வீசப்பட்டது. இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கி சிதறின.

அதிர்ஷ்டவசமாக இந்த கல்வீச்சில் ராகுல் உயிர் தப்பினார். கடந்த மூன்று நாட்கள் விடுமுறைக்குப்பின் நேற்று கூடிய நாடாளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இது ராகுலின் உயிருக்கு அச்சுறுத்தல்’’ என குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘காஷ்மீரில் தீவிரவாதிகள் கல் வீசுவதாக கூறுகிறார்கள். அந்த தீவிரவாதிகள் குஜராத்திலும் இருக்கிறார்களா?’’ என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது கார்கேவுக்கு எதிராக பா.ஜனதா உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால், இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் எழுந்தது.

தொடர்ந்து பேசிய கார்கே, மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது என்று கூறியதுடன், ‘‘வேண்டும் என்றே பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். அந்தக் கல் அவரை தாக்கி இருந்தால் ராகுல் உயிர் இழந்து இருப்பார் என்ற அவர், ‘‘ராகுல் தியாகியின் மகன் என்பதால் நாங்கள் அது குறித்து பயப்படவில்லை’’ என்றும் கூறினார்.

குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘‘ராகுல் தேசியத் தலைவர். இந்த அவையின் மரியாதைக்குரிய உறுப்பினர். அவர் விலை மதிக்க முடியாதவர். அதே நேரத்தில் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர், ராகுல்’’ என்று குறிப்பிட்டார்.

100 முறை குண்டு துளைக்காத காரை அவர் பயன்படுத்தவில்லை என்றும், கறுப்பு பூனை பாதுகாப்பு படையினர் இல்லாமல் 72 நாட்கள் வெளிநாடு சென்று வந்ததாகவும், குஜராத்திலும் குண்டு துளைக்காத காரை தவிர்த்துவிட்டு வேறு காரில் சென்றதாகவும், திட்டமிடப்படாத பல இடங்களில் ராகுல் இறங்கிச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ராஜ்நாத் சிங்கின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அவையின் மத்திய மண்டபத்துக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், கல் வீச்சு சம்பவத்துக்கு மக்களவை கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பந்தோபாத்யாயா வலியுறுத்தினார்.

சபாநாயகர் அதை ஏற்காமல் அவை நிகழ்ச்சிகளை தொடர முயன்றதால், காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற அமளியின்போது காங்கிரஸ் தலைவர் சோனியாவோ அல்லது துணைத்தலைவர் ராகுல் காந்தியோ அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.