குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

இதையடுத்து தனேரா நகரில் அவர் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது அங்கு சிலர் ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சிலர் திடீரென ராகுல் காந்தி கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசித் தாக்கியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.