சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் விசாரிக்க சோனியா காந்திக்கும் அமலாக்க துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 

ராகுல் காந்தியிடம் நான்காவது நாளாக விசாரணையை மேற்கொண்ட அமலாக்கத் துறை, அவரை இன்றும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்து இருக்கிறது. நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக சட்ட விரேத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து இருக்கிறது. 

கடந்த வாரம் திங்கள் கிழமை துவங்கிய விசாரணை, அடுத்தடுத்த நாட்களான செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை நீடித்தது. பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியை பார்க்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் இன்று நான்காவது நாளாக ராகுல் காந்தியிடம் அமலக்க துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நான்கு நாட்களில் சுமார் 40 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். 

சோனியா காந்தி டிஸ்சார்ஜ்:

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் விசாரிக்க சோனியா காந்திக்கும் அமலாக்க துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. எனினும், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜூன் 23 ஆம் தேதி வரை சோனியா காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

நேஷனல் ஹெரால்டு செய்தித் தாளை நடத்தி வந்த அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை யங் இந்தியன் எனும் அமைப்பு விலைக்கு வாங்கிய விவகாரத்தில் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தாளாக பார்க்கப்பட்டு வந்த நேஷனல் ஹெரால்டு, அதன் பின் ஆன்லைன் வடிவில் மட்டும் செயல்பட்டு வருகிறது. 

வருமான வரி செலுத்தவில்லை:

அசோசியேடெட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ. 800 கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் இந்தியன் கையகப்படுத்தியதை அடுத்து, இது யங் இந்தியன் அமைப்பில் பங்குதாரர்களாக உள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் சொத்தாக கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு அவர்கள் வரி செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. யங் இந்தியன் தொண்டு நிறுவனம் என்பதால், பங்குதாரர்கள் அதன் சொத்துக்களில் இருந்து வருமானம் ஈட்ட முடியாது என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த வாரம் மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.