ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இன்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், ஸ்டாலின், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் காங்கிரஸ் தலைமையில் சிம்லாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன் நான் பேசுகிறேன். நான் இப்போது ஃபிட்டாக இருக்கிறேன்; பாஜகவை ஃபிட்டாக மாற்றுவேன்.” என அவருக்கே உரிய நையாண்டி பாணியில் பேசினார். மேலும், தேர்தலின் போது, இந்து-முஸ்லிம் என பேசுவார்கள்; ஹனுமான் பெயரில் தேர்தலை சந்திப்பார்கள்; இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் ஹனுமான் ஆதரவு தருகிறார். எதிர்க்கட்சிகளுடன் ஹனுமான் நிற்கிறார் என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமற்றது... மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக? அமித் ஷா ஆருடம் பலிக்குமா?

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவைப் பாராட்டிய லாலு பிரசாத் யாதவ், நாடு முழுவதும் நடந்து மிகச் சிறந்த வேலையை அவர் செய்துள்ளதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் அதானி குழுவின் சர்ச்சையை அவர் எழுப்பிய விதத்தையும் லாலு பிரசாத் யாதவ் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய லாலு பிரசாத் யாதவ், எனது பரிந்துரையை ராகுல் காந்தி ஏற்கவில்லை. அவருக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னும் நேரமிருக்கிறது. உங்கள் அம்மா எங்களிடம் எப்பொழுதும் குறை கூறுகிறார்கள். இப்போது நீங்கள் எங்கள் பேச்சை கேட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நீங்கள் சொன்னால் நான் கட்டாயம் கேட்பேன் என்றார். உங்களுக்கு திருமணமாகும்போது, மணமகன் வீட்டாராக எதிர்க்கட்சிகள் இருப்பர் எனவும் லாலு யாதவ் கூறினார்.

முன்னதாக குறுக்கிட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி தாடி வளர்த்ததை லாலுவிடம் நினைவு கூர்ந்தார். அதற்கு, நீங்கள் உங்கள் தாடியை ட்ரிம் செய்து கொள்ள வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் ராகுலிடம் கூறினார். லாலுவின் இந்த பேச்சின்போது, அங்கு கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது.

ராகுல் காந்தி அண்மையில் தனது 53ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனது திருமணம் குறித்து ராகுல் பேசியிருந்தார். “நான் திருமணத்திற்கு எதிரானவன் இல்லை.. பிரச்சனை என்னவென்றால் எனது பெற்றோருக்கு மிக அழகான ஒரு திருமணம் அமைந்தது. அவர்கள் ஒருவரையொருவர் முழுமையாகக் காதலித்தனர். இதனால் என் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. சரியான பெண்ணை பார்க்கும் போது நிச்சயம் திருமணம் செய்வேன். புத்திசாலியான ஒரு அன்பான நபரைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். இது எப்போது நடக்கும் எனத் தெரியாது.” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.