ராகுல், சோனியா காந்தி பயணித்த விமானம் போபாலில் அவசரத் தரையிறக்கம்!
ராகுல் காந்தி மற்றும் சோனியா பயணித்த பெங்களூரு-டெல்லி விமானம் மோசமான வானிலை காரணமாக போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா பயணித்த பெங்களூரு-டெல்லி விமானம் இன்று மாலை மோசமான வானிலை காரணமாக போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இருவரும் பெங்களூரில் 26 கட்சிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு டெல்லி திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் இரவு 7.45 மணியளவில் நடந்துள்ளது. தரையிறங்கிய விமானம் இரவு 9.30 மணியளவில் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது. போபால் விமான நிலையத்தில் காத்திருந்த ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரையும் மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர் பி.சி.சர்மா, எம்.எல்.ஏ குணால் சவுத்ரி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
பெங்களூரு கூட்டத்தில் 2024 லோக்சபா பிரச்சாரத்திற்கான வியூகம் அமைக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 2024ல் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போராக இருக்கும் என்று ராகுல் காந்தியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல், தங்கள் சித்தாந்தம் மற்றும் திட்டங்களைப் பற்றி பேசுவதற்கு ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கும் பாஜகவின் சித்தாந்தத்திற்குமான போராட்டமாக இருக்கும் என்ற அவர், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்றும் நாட்டின் செல்வம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டு பிரதமரின் நண்பர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் சாடினார்.
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.