பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்த விவகாரம் பெரும் விமர்சனங்களை உண்டாக்கி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிட்டது. 

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ராகுல்காந்தி, மோடி சந்திப்பு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. 

ரூபாய் நோட்டு விவகாரம்

ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தார். அப்போது இருந்து, மத்தியஅரசுக்கு நெருக்கடி தரும் வகையில் காங்கிரஸ் கட்சியும், அதன் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் தொடர்ந்து விமர்சித்து பேசி வருகின்றனர். 

எதிர்ப்பு

இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன் பணம் பெற நிற்கும் மக்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்துவந்தார். தானும் ஒரு முறை வரிசையில் நின்று ஏ.டி.எம்.மையத்தில் இருந்து பணம் எடுத்து தனது எதிர்ப்பை கடுமையாக மத்தியஅரசிடம் பதிவுசெய்தார். 

இதனால், ரூபாய் நோட்டு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியுடன் 14 எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து மத்தியஅரசுக்கு கடும் குடைச்சல் கொடுத்து வந்தன. 

கடும் அமளி

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் கட்சியும், அதன் ஆதரவு கட்சிகளும் கடும் அமளியில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை திணறிடித்தன. இதனால், குளிர்காலக் கூட்டத்தொடர் ஒரு நாள் கூட முழுமையாக நடக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசும் போது " பிரதமர் மோடி ரூபாய் நோட்டு விவகாரத்தில் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அவையில் பேச ஏன் பயப்படுகிறார் " என்று கேள்வி எழுப்பினார். 

புதிய குண்டு

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு ஒன்றை பிரதமர் மோடி மீது வைத்தார். " பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் தொடர்பாக என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அது குறித்து நான் வெளியிட்டால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் " என தெரிவித்திருந்தார். 

இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சிகளின் கரங்கள் மேலும் வலிமை பெறத்தொடங்கின. 

மோடி-ராகுல் சந்திப்பு

இந்த சூழலில் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தனது கட்சியின் மூத்த தலைவர்களான 

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜோதிர் ஆதித்யா, சிந்தியா, ராஜ்பாப்பர் ஆகியோருடன் சேர்ந்து பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார்.​

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் இன்னல், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை தீர்க்க 

​ மனு கொடுத்தோம். 

 விவசாயிகள் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டார். அவர்களது கடனை தள்ளுபடி செய்வது பற்றி எதுவும் கூறவில்லை​

​என்று ராகுல்காந்தி தெரிவித்தார். 

சலசலப்பு

ஆனால், இந்த சந்திப்புதான் இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. 

புறக்கணிப்பு

பிரதமர் மோடியை சந்தித்தபின், காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மனு அளிக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. ஆனால், ராகுல்-மோடி சந்திப்பால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகளான தி.மு.க. பகுஜன்சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, தேசியவாதகாங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. 

கண்டனம்

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ஒரு வர் கூறுகையில் " ராகுல்காந்திக்கு மட்டும் தான் விவசாயிகள் மீது அக்கறை இருக்கிறதா. எங்களுக்கு அக்கறை இல்லை. தன்னிச்சையாக முடிவு எடுத்து விட்டார் ராகுல் " என்று தெரிவித்தார். 

2 வாரத்துக்கு முன்

ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க கடந்த 2 வாரங்களுக்கு முன்பே ராகுல்காந்தி திட்டமிட்டு, அது தொடர்பாக அவரிடம் முன்அனுமதி பெற்றுள்ளார் என எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

ஆனால், இந்த செய்தியை காங்கிரஸ் தரப்பு மறுக்கிறது. இது திட்டமிடப்படாத ஒரு செயல் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடியிடம் மனு அளித்தோம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

​கெஞ்சல்

ஆனால், எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தி பிரதமர் மோடியை சந்திக்கச் செல்கிறார் என்று அறிந்த உடன், இப்போது சந்திக்க வேண்டாம், தள்ளிப்போடுங்கள், ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாம் எடுத்து இருக்கும் நிலைப்பாட்டுக்கு மாறுபட்டு இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதைக் கேட்காமல் ராகுல்காந்தி பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். 

தன்னிச்சையான முடிவு

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், " பிரதமர் மோடியை ராகுல்காந்தி சந்தித்தது தன்னிச்சையான முடிவு எங்களை ஆலோசிக்கவில்லை" என்றார். 

ஆத்திரம்

அதேசமயம், எதிர்க்கட்சிகளான 14 கட்சிகள் ஒன்று திரண்டு காங்கிரஸ் கட்சிக்கு பக்கபலமாக மாறி வரும் நிலையில், ராகுல்காந்தி, பிரதமர் மோடியைச் சந்தித்து, அனைத்தையும் நாசப்படுத்திவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர். 

நெருக்கடியா

இதற்கிடையே, ஹரியானாவில் ப்ரியங்கா காந்தியின் கணவர், ராபர்ட் வத்ராவின் நில மோசடி விவகாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த விவகாரத்தில் மத்திய அ ரசு சோனியாவுக்கும், ராகுலுக்கும் மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது. 

இது காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், துணைத்தலைவர் 

ராகுல்காந்திக்கும், 

​ மன வருத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளவே ராகுல்காந்தி, பிரதமர் மோடியை சந்தித்தார் எனவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

விலைபோய்விட்டாரா

ஒட்டுமொத்தத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மோடியின் மிரட்டலுக்கு விலை போய்விட்டாரா என சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.