ஏழை மக்களை மத்திய அரசு மறந்து விட்டது: ராகுல் காந்தி!
ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை மத்திய அரசு மறந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.100ஐ தாண்டியுள்ளது. அதேபோல், வேறு சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை, சமையல் சிலிண்டர்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை மத்திய அரசு மறந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் மத்திய அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், மத்திய அரசானது முதலாளிகளின் செல்வத்தை பெருக்குவதிலும் பொதுமக்களிடம் இருந்து வரியை வசூலிப்பதிலும் மும்முரமாக உள்ளதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தக்காளி கிலோ ரூ.140, காலிபிளவர் ரூ.80, துவரம் பருப்பு ரூ.148 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1100க்கும் அதிகம்.
பாஜ தலைமையிலான மத்திய அரசானது முதலாளிகளின் செல்வத்தை பெருக்குவதிலும் பொதுமக்களிடம் இருந்து வரியை வசூலிப்பதிலும் மும்முரமாக உள்ளன. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை அரசு மறந்துவிட்டது; இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இருந்தால் வருமானம் குறைவாக இருக்கிறது. பணவீக்கத்தால் சேமிப்பு கரைந்து விட்டது. ஏழைகள் சாப்பிட ஏங்குகிறார்கள். நடுத்தர மக்கள் சேமிக்க ஏங்குகிறார்கள்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், பணவீக்கத்தில் இருந்து நிவாரணம் வழங்க, நிதி உதவிக்காக ஏழைகளின் கணக்கில் பணம் போட, சிலிண்டர் விலையை குறைத்தோம்.
இந்திய ஒற்றுமைப் பயணம் என்பது வெறுப்பை நீக்குவதற்கும், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றுவதற்கும். சமத்துவத்தை கொண்டு வருவதற்குமான உறுதிமொழி. பொதுப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜகவை அனுமதிக்க மாட்டோம். 9 வருடமாக இதே கேள்வி! இது யாருக்கான அமிர்த காலம்.” என மத்திய அரசை நோக்கி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி: நிவாரண முகாம்களை பார்வையிடுகிறார்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி இதுபோன்று மத்திய அரசை விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.