ராகுல் காந்தியின் தண்டனை ரத்தாகுமா? மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது
சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ஆம் தேதி மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டு அவருக்கு ஜாமீனும் கொடுக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை அடுத்து மறுநாளே ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறியது. அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுமா அல்லது குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.