தடுத்து நிறுத்தப்பட்ட கான்வாய்: மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி!

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார்

Rahul Gandhi convoy stopped in manipur was on his way to violence epicentre Churachandpur

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. மைதேயி, குகி ஆகிய இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. மணிப்பூர் கலவரத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கலவர பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு நாட்கள் பயணமாக காங்கிரஸ் மூன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, அம்மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி: நிவாரண முகாம்களை பார்வையிடுகிறார்!

சுராசந்த்பூர் சென்ற ராகுல் காந்தியின் கான்வாய் பிஷ்னுபூரில் அம்மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இம்பால் திரும்பினார். “பிஷ்னுபூர் அருகே ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. எங்களை அனுமதிக்கும் நிலையில் இல்லை என போலீசார் கூறுகின்றனர். ராகுல் காந்தியை நோக்கி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கைகளை அசைக்கிறார்கள். எங்களை ஏன் தடுத்தார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.” என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அந்த வழித்தடத்தில் வன்முறை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் ராகுல் காந்தியின் கான்வாய் நிறுத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஷ்னுபூரில் உள்ள உட்லோ கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் மீது சில கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழும் என்று நாங்கள் அஞ்சுகிறோம், எனவே முன்னெச்சரிக்கையாக, பிஷ்ணுபுவில் நிறுத்துமாறு ராகுல் காந்தியின் கான்வாயை கேட்டுக் கொண்டோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றத்தை தணிக்கும் வகையில் ராகுல் காந்தியின் இந்த பயணம் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், ராகுலின் பயணம் சந்தர்ப்பவாத அரசியல் என பாஜக ஏற்கனவே விமர்சித்திருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

முன்னதாக, மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஹராதெல் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி தற்போது துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios