பிரதமர் மோடியின் தவறான காஷ்மீர் கொள்கையே காரணம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் இந்திரா கேண்டீன் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்சனை குறித்து அவர் பேசியதாவது-

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெறுப்பையும் கோபத்தையும் உருவாக்கிவிட்டார். இதனால் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை பாகிஸ்தானுக்கே சாதகமாக மாறிப்போயுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நாடகம் எதுவும் நடித்தாமல் காஷ்மீரின் அமைதிக்காக அமைச்சர்களுடன் சேர்ந்து பணியாற்றினேன். நாங்கள் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை நடத்திக்காட்டினோம்.

பல ஆயிரக்கணக்கான காஷ்மீர் பெண்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கினோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கினோம்.காஷ்மீர் மக்கனை அன்புடன் அரவணைத்துச் சென்றோம்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டோம்.

ஆனால் கடந்த 10 வருடங்களாக காஷ்மீரின் அமைதிக்காக நாங்கள் எடுத்த முயற்சிகளை பிரதமர் மோடி ஒரே மாதத்தில் அழித்து ஒழித்துவிட்டார்.

பிரதமர் மோடி காஷ்மீரில் வெறுப்பு அரசியலை நடத்துவது பாகிஸ்தான் அரசு மிக மோசமாக நடந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித்தந்துள்ளது. காஷ்மீர் அமைதியாக இருப்பதுதான் பாகிஸ்தானுக்கு எதிரானது.

பிரதமர் மோடியின் அண்டை நாட்டு கொள்கை நமது அண்டை நாடுகளை அன்னியப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு ரஷ்யா ஆயுதங்களை வினியோகிப்பது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.