பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எல்லா தகுதியும் உள்ளது. ஆனால், தேர்தலுக்கு பிறகுதான் பிரதமரை தேர்வு செய்வோம் என்று ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மகனும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி செய்தியாளர்களிடம் மழுப்பலாக பதில் கூறியிருக்கிறார்.  என  “பிரதமராகும் அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளன. தேசியக் கட்சியின் தலைவர் அவர். ஐந்து மாநிலங்களில் அவருடைய கட்சி ஆட்சி செய்கிறது. ஆனால், ராகுலுக்கு எதிராக பாஜக பிரசாரம் செய்தது. ஆனால், ராகுல் தன் திறமையை நிரூபித்து வருகிறார். பல்வேறு கட்சிகளின் சங்கமம்தான் கூட்டணி. எங்கள் கூட்டணி வென்றால், பிரதமர் யார் என்பதை, உடனே சொல்ல முடியாது. தேர்தலுக்குப் பிறகுதான் முடிவெடுப்போம்.” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டுவரும் ஐக்கிய் முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக கேள்வி கேட்டு அந்தக் கூட்டணியை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிவருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ராகுலை பிரதமராக ஏற்க தங்குவதாகவும் பாஜக பிரசாரம் செய்தது. கடந்த மாதம் சென்னையில் கருணாநிதி சிலைத் திறப்பின்போது ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 

ஆனால், இதற்கு தேசிய அளவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளே ராகுலை ஆதரித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு பிரதமரை முடிவு செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியும் கூறியது. ஆனால், ஸ்டாலினை தொடர்ந்து ராகுல் பிரதமராக முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆதரவு தெரிவித்தார். அவரது மகன் குமாரசாமி முதலில் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிறகு ராகுல் பிரதமராக ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் லல்லு கட்சி ராகுலை வெளிப்படையாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.